கும்மிடிப்பூண்டி அருகே சிறுவனை அடித்து கொன்ற தந்தை கைது
கும்மிடிப்பூண்டி அருகே சிறுவனை அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (11). இவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ந்தேதி இரவு மகன் கார்த்திக் வீட்டில் உள்ள துணிகளை கலைத்து போட்டு அதிக குறும்பு செய்ததால் அவனை கைகளாலும், செல்போன் சார்ஜர் கொண்டும் தந்தை முத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கழுத்தின் பின்பகுதியில் காயம் அடைந்த கார்த்திக் சுயநினைவின்றி மயங்கி கீழே விழுந்தான்.
இதனையடுத்து கார்த்திக் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கார்த்திக்கின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற நிலையில், இது தொடர்பாக கார்த்திக்கின் தாய் நீலா (34), தனது கணவர் முத்து அடித்ததால்தான் மகன் கார்த்திக் இறந்ததாக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை சென்னையில் பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில், அடித்ததால்தான் கார்த்திக் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று இரவு முத்துவை கைது செய்தனர்.