பொம்மையார்பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல் - கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பால் மீண்டும் வீடுகள் சேதமடைவதால் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-12-05 22:00 GMT
வானூர், 

புதுச்சேரியையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலின்போது ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடற்கரையையொட்டியுள்ள வீடுகள் அவ்வப்போது இடிந்து விழுந்து வருகின்றன. இதுவரை சுமார் 70 வீடுகள் இடிந்துள்ளன. இதுதவிர சிமெண்டு சாலைகள், வலைக்கூடங்கள், தென்னை மரங்கள் சரிந்து கடல் அலையில் அடித்துச் செல்லப்படுகின்றன.

கடல் அரிப்பினால் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை தடுக்கும் வகையில் பொம்மையார்பாளையம் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று ரூ.19 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அந்த பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்தநிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக கடல் அரிப்பால் மேலும் சில வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவில் தொடங்க கோரி நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பொம்மையார்பாளையத்தில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக காலை 8 மணி முதல் 8.30 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்