பாலாற்றில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு செல்லும் கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பாலாற்றில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-12-05 14:15 GMT
காவேரிப்பாக்கம்,

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகவெளி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த ஊரின் மேற்குப் பகுதியில் பாலாற்றில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.

மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து செல்லும். இதனால் கால்வாயின் மேற்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டுமானால் கால்வாயில் ஓடும் தண்ணீரில் இறங்கி மறுபக்கம் செல்கின்றனர். இதனால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

தண்ணீர் அதிகமாக செல்லும் சமயங்களில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஆடு, மாடுகளை ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு ஓட்டிச்செல்லவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்