வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் - 150 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக திருப்பூர் டவுன்ஹாலில் இருந்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தூக்கில் தொங்கவிட்டிருந்தனர். பின்னர் தடுப்புகளை மீறி அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். ஏற்கனவே திருப்பூர் வடக்கு போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகம் நுழைவாசல் முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கம்யூனிஸ்டு கட்சியினரை அலுவலக வளாகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்களை தாக்கியதாக கூறி போலீசாருடன் கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்பு தூக்கி எறியப்பட்டது.
பின்னர் கம்யூனிஸ்டு கட்சியினர் குமரன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 150 பேரை வடக்கு போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.