டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர் கலப்பையுடன் மறியல்; வெங்கடேசன் எம்.பி. உள்பட 230 பேர் கைது

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் ஏர் கலப்பையுடன் மறியலில் ஈடுபட்ட மதுரை எம்.பி. உள்பட 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-05 06:14 GMT
மதுரை பெரியார் பஸ் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் வெங்கடேசன் எம்.பி. தலைமையில் சாலை மறியல் செய்தனர்
விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, மதுரை எம்.பி. வெங்கடேசன் தலைமையில் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக கட்டபொம்மன் சிலை அருகே திரண்டனர். பின்னர் அவர்கள், தாங்கள் கொண்டு வந்த ஏர் கலப்பையுடன் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். போராட்டத்தின் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினர், ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக, ரெயில் நிலையத்திற்குள் நுழைய முன்றனர். மீதமுள்ளவர்கள் அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் நுழைய முயன்றவர்களை போலீசர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

தள்ளுமுள்ளு
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதனால், அந்த பகுதி போராட்டக்களமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பிரதமர் நரேந்திர மோடி உருவப்படத்தை எரித்து கோஷங்களை எழுப்பியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் மதிவாணன், எஸ்.யு.சி.ஐ. மாவட்ட செயலாளர் வால்டர் உள்பட 230 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதில் 50 பேர் பெண்கள். 
போராட்டத்தின் காரணமாக, மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்