ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு ரூ.162½ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்; துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூ.162½ கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

Update: 2020-12-05 03:24 GMT
புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்
புதிய குடிநீர் திட்டம்
ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியங்களில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் அதற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்றது. ஆய்வு பணிகள் முடிந்த நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.162 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ஆண்டிப்பட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

250 கிராமங்கள்
இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியங்களில் உள்ள 250 கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் 40 இடங்களில் பிரமாண்ட தரைகீழ் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் 2 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், ஆண்டிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என்.வரதராஜன், கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்