தனியார் மயத்தை கண்டித்து கொட்டும் மழையில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை

மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து கொட்டும் மழையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக முற்றுகையிட்டனர்.

Update: 2020-12-04 23:27 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் வம்பாகீரப்பாளையம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொட்டும் மழையில் ஊழியர்கள் மழை கோட்டு அணிந்தும், குடை பிடித்தபடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மழையால் ஆங்காங்கே ஏற்பட்ட மின் தடை குறித்து புகார் செய்தும் அதனை சரி செய்ய மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்து தி.மு.க. தெற்கு மாநில தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் வேலவன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் மதனா, வர்த்தகர் அணி ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்ததால் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி அங்கு வந்து, விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதை ஏற்று அவர்கள்ட போராட்டத்தினை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உப்பளம் தொகுதி மக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, 2 நுழைவாயில்களையும் இழுத்து மூடி பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஊழியர்கள் யாரும் மின்துறை அலுவலகத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.

மின்துறை தனியார் மயமாக்கத்திற்கு சட்டசபையில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். புயல் மழையால் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் போராட்டம் நடத்துவது நியாயமற்றது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். இந்த போராட்டத்தில் சவரிநாதன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், அகமது, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் காரணமாக மின்துறை தலைமை அலுவலகம் நேற்று போராட்ட களமானது.

மேலும் செய்திகள்