மண்டியா டவுனில் சம்பவம்: மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவர் கைது
மண்டியா டவுனில், மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மண்டியா,
மண்டியா (மாவட்டம்) டவுன் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்(வயது 61). கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு மைனர் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள். தினமும் காலையிலேயே அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதனால் அந்த மைனர் பெண் பெரும்பாலும் தனது வீட்டில் தனியாகவே இருந்து வந்திருக்கிறாள். இதை பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ், அந்த மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த மைனர் பெண்ணுக்கு, வெங்கடேஷ் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இருப்பினும் அந்த மைனர் பெண், இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறாள். ஆனால் அவர்கள் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதை தனதுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ், தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார். இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பம் அடைந்தாள். இதுபற்றி அறிந்த அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் மண்டியா மேற்கு போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதேபோல் மண்டியா மாவட்டம் மத்தூரில் ஒரு மைனர் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கற்பழிக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அவர்கள் அந்த மைனர் பெண்ணை கொடூரமாக கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி அப்பகுதியில் ஓடும் கால்வாயில் வீசிச்சென்று விட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் மைனர் பெண்ணை ஒருவர் கற்பழித்து கர்ப்பமாக்கிய சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.