தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் - திண்டுக்கல் லியோனி பேச்சு
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார்.
நெல்லை,
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரம் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தொடங்கியது. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. அலுவலகத்தில் சங்க கொடி மற்றும் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், தொ.மு.ச. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற லட்சிய பாதையில் பயணித்து வருகிறோம். இதில் 17 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகின்றனர். நான் நெல்லை மாவட்டத்தில் எனது பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். இங்கு பேசியவர்கள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினார்கள். இன்னும் 3 மாதத்தில் தி.மு.க. ஆட்சி அமையும். அப்போது அவர்களுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். நிலுவை ஓய்வூதியத்தொகை வழங்கப்படும். சம்பள பிரச்சினை தீர்க்கப்படும்.
தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்து தேர்தல் வாக்குறுதியாக தயாரிக்கப்படுகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். அம்பை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய 2 அணைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். அவர் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை வைத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஸ்டாலின் விரைவில் முதல்-அமைச்சர் ஆவார். இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகளிடம் திண்டுக்கல் லியோனி குறைகளை கேட்டார். இதில் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன், தச்சை சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.