முக்காணி ஆற்றுப்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

முக்காணி ஆற்றுப்பாலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-04 22:45 GMT
ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள செவலூர் கிராமத்தை சேர்ந்த இளையபெருமாளின் மகன் சங்கர் (வயது 39). தொழில் அதிபரான இவர் தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக நேற்று தூத்துக்குடிக்கு சென்று அங்கிருந்து ஒரு பழைய காரை வாங்கியுள்ளார். அந்த காரை மதுரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (46) என்பவர் ஓட்டி வந்தார். அந்த காரில் இருவரும் தூத்துக்குடியில் இருந்து உடன்குடிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

முக்காணி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவே வந்தபோது திடீரென்று காரின் பின் பக்கத்தில் தீப்பிடித்தது. அப்போது பாலத்தின் கீழே வெள்ள மீட்பு பணிக்காக ரோந்து சென்ற போலீஸ் மீட்பு படையினர் பார்த்து சத்தமிட்டு உள்ளனர்.

அதனை கேட்டு டிரைவர் காரை உடனடியாக நிறுத்தினார். பின் பக்கம் பார்த்தபோது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடி உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுபற்றி அறிந்ததும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்