கொடைக்கானல் பகுதியில் தொடர் மழை: போக்குவரத்துக்கு தடை; கார் கவிழ்ந்தது

கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடர்மழை பெய்தது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேகமூட்டம் காரணமாக கார் கவிழ்ந்தது.

Update: 2020-12-04 14:45 GMT
கொடைக்கானல்,

வங்க கடலில் உருவான புரெவி புயலால் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது. கொடைக்கானல் மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை நேற்று இரவு வரை இடைவிடாது பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து அவ்வபோது மின்தடை ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்தால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு 7 மணிமுதல் போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டது. வத்தலக்குண்டு மற்றும் பழனி பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மலை அடிவாரப்பகுதியில் நிறுத்தப்பட்டது. மேலும் மேல்மலைக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே கொடைக் கானல்-பழனி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாதையில் கோம்பைக்காடு அருகே சாலை ஓரத்தில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பாதை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெருமாள் மலைப்பகுதிக்கு கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து வந்த கார் மேகமூட்டம் காரணமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த அப்துல்லா (வயது 20) உள்பட 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தொடர் மழை காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிறைந்து உபரி நீர் வெளியேறியது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 133.7 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 25 மி.மீ., திண்டுக்கல்லில் 20.3 மி.மீ. மழை பதிவானது. மேலும், வேடசந்தூர் மற்றும் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் தலா 19 மி.மீ., கொடைக்கானல் போட்கிளப்பில் 13 மி.மீ., நத்தத்தில் 12 மி.மீ., காமாட்சிபுரத்தில் 9 மி.மீ., சத்திரப்பட்டியில் 7.2 மி.மீ., பழனியில் 5 மி.மீ., நிலக்கோட்டையில் 4.2 மி.மீ. மழை பெய்தது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 133.7 மி.மீ. மழை பதிவானது.

திண்டுக்கல்லில் நேற்று பகலில் சூரியனை காணமுடியவில்லை. தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுபோல பழனி, நத்தம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்