நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி பேட்டி
நிவர் புயலால் தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றி உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 10 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் நேற்று புத்தகங்கள் வழங்கி பாராட்டினர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல்-திருச்சி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது பழுதாகி உள்ள பகுதி புதுப்பிக்கப்பட உள்ளது.
நிவர் புயல் சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தை பொருத்தவரையில் இதுவரை ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புரெவி புயல் சேதாரம் குறித்து இன்றோ அல்லது நாளையோ தெரியவரும். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த புயலை போன்று தற்போதும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்தைப் பொறுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்படும். புயல் கரையை கடந்த பிறகு படிப்படியாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும். பள்ளிபாளையத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவியின் கை மின்சார வயர் மீது பட்டதால் விபத்து ஏற்பட்டு, அவரது கை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு உதவி செய்துள்ளேன். மின்சார வாரியம் சார்பில் நிவாரணம் வழங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.