கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு:கிராம மக்கள் 4 மணி நேர மறியல் போராட்டம்
வத்திராயிருப்பு அருகே கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தாலம்மன் கோவில்
வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு முத்தாலம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை கோவிலை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கிராம மக்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மறியல்
மேலும் நேற்று தம்பிப்பட்டி - அழகாபுரி சாலையில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வத்திராயிருப்பில் இருந்து அழகாபுரி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், வத்திராயிருப்பு தாசில்தார் ராமதாஸ், இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோர்ட் இறுதி தீர்ப்பு வராமல் இந்து அறநிலையத் துறையினர் கோவிலை கையகப்படுத்த முடியாது என உறுதி அளித்த பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.