காஞ்சீபுரம் மாவட்டத்தில் உழவர், அலுவலர் தொடர்பு திட்டம்; அதிகாரி தகவல்

வேளாண் துறை அதிகாரிகள் கிராம ஊராட்சிகளில் விளைநிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்க உழவர், அலுவலர் தொடர்பு திட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-04 02:06 GMT
காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுளள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் துறையில் விரிவாக்க பணிகளை வலுப்படுத்தவும், வேளாண் துறை நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெறுவதற்கு உழவர், அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவர் நலன் காக்கும் மானிய திட்டங்களை விவசாயிகளிடையே உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் வேளாண் விரிவாக்க சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து அதற்கு ஏற்றாற்போல் விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்குவது விரிவாக்கப்பணியின் முக்கிய பொறுப்பாகும். தற்போது உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளுடனான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், விவசாயிகளின் வயல்களில் செயல்விளக்கத்திடல் அமைத்தல் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா ஏற்பாடு செய்தல், பண்ணைப்பள்ளிகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து விவசாயிகளுடன் உரையாடுதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தினை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துதல் போன்ற பலவிதமான விரிவாக்கப்பணிகளை வேளாண்மைத்துறை மேற்கொண்டு வருகிறது.

வட்டார வேளாண் விரிவாக்க குழு
உழவர் அலுவலர்கள், அலுவலர் தொடர்பு திட்டத்தின் விவசாயிகளையும், விரிவாக்க குழுவினரையும் சந்திக்கிறார்கள். வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரின் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டு வட்டார வேளாண் விரிவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தெரிவு செய்து அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற முன்னோடி விவசாயிகள் வேளாண்மை துறைக்கும் மற்ற விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்பு பற்றிய விவரங்களையும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். மாவட்ட வேளாண் இணை இயக்குநர், வேளாண் துணை இயக்குநர்களை கலந்து ஆலோசித்து பயிர் சாகுபடிக்கு தேவையான மாதாந்திர தொழில்நுட்ப செய்தியை வட்டாரக்குழு தயாரித்து வழங்கும்.

2 வாரத்துக்கு ஒரு முறை
உதவி வேளாண்மை அலுவலர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பயணம் மேற்கொண்டு வயலாய்வு செய்து முன்னோடி விவசாயிகளையும், இதர விவசாயிகளையும் சந்தித்து பயிர்களுக்கு தேவையான தொழில் நுட்பங்களை வழங்குவார்கள். உழவன் செயலியில் வட்டார விரிவாக்க குழு நிர்ணயித்த பயணத்திட்டத்தின்படி உதவி வேளாண்மை அலுவலர்கள் கிராமஊராட்சிகளிலும் பயணம் மேற்கொள்வார் கள். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள அதிக அளவில் விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் தோவு செய்யப்படுவர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்