சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து மருத்துவ கல்லூரி அதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; 5 பேர் கைது
சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து மருத்துவ கல்லூரி அதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது 40). இவர், ஆலப்பாக்கத்தில் பல் மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரையும் வெளியேற்றினர். அதன்பிறகு ராகேசை வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்த அவர்கள், சிலை கடத்தல் வழக்கில் ராகேஷ் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதிலிருந்து அவரை தப்பிக்க வைக்க ரூ.10 கோடி தரவேண்டும் எனவும் மிரட்டினர்.
5 பேர் கைது
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராகேஷ், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று ராகேஷ் வீட்டில் இருந்தவர்களை மடக்கிப்பிடித்தனர்.
அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 5 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், குன்றத்தூரை சேர்ந்த நரேந்திர நாத் (40), யோவான் (41), ராமசுப்பிரமணி (42), சங்கர் (41) மற்றும் அனகாபுத்தூரை சேர்ந்த ஸ்டாலின் (40) என்பதும், இவர்களில் ராமசுப்பிரமணி என்பவர் ராகேசுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும் தெரியவந்தது.
2 பேருக்கு வலைவீச்சு
மருத்துவ கல்லூரி அதிபரான ராகேஷ், பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி ராமசுப்பிரமணி தனது நண்பர்களுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து, போலி அடையாள அட்டையை காண்பித்து ராகேசுக்கு சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக மிரட்டி அதிகளவில் பணம் பறிக்க முயன்றது தெரிந்தது.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.