தென்காசியில் இயற்கை உரம் கிலோ ரூ.3-க்கு வாங்கி பயன்பெறலாம் - அதிகாரி தகவல்
தென்காசியில் இயற்கை உரம் கிலோ ரூ.3-க்கு வாங்கி பயன் பெறலாம் என்று நகரசபை அதிகாரி தெரிவித்தார்.
குப்பைகள் பிரிப்பு
தென்காசி நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை சேகரிக்க நகரசபை பொது சுகாதார பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அண்ணா நகர், தலைமை தபால் நிலையம் பின்புறம், ஆய்க்குடி சாலையில் மைனாபேரி பகுதி, அம்பை ரோடு (குப்பை கிடங்கு இருந்த இடம்) ஆகிய பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகின்றது. இவற்றில் மக்காத குப்பையை கடையநல்லூரில் உள்ள குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இயற்கை உரம்
மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், சமையலறை கழிவுகள் போன்றவற்றை ஒரு எந்திரத்தில் போட்டு அவை துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. இதன்பிறகு அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள 14 தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன.
அதில் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் இ.எம். என்ற திரவம் தெளிக்கப்படுகிறது. பின்னர் அந்த குப்பைகள் கிளறி விடப்படுகின்றன. 45 முதல் 60 நாட்கள் வரை அந்த குப்பைகள் அங்கு இருக்கும். பின்னர் அவற்றை எடுத்து தூளாக்கும்போது அவை இயற்கை உரமாகிறது.
கிலோ ரூ.3-க்கு விற்பனை
இவ்வாறு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம் என நகரசபை சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மேற்கண்ட 4 இடங்களிலும் மொத்தம் ரூ.50 லட்சம் செலவில் நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுத்தால் பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். குப்பைகளில் பிளாஸ்டிக், தகரம், மரக்கட்டைகள் போன்றவை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.