நெல்லையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்: “புயல், மழை குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

‘புயல், மழை குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம், எப்போதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்‘ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2020-12-03 22:40 GMT
நெல்லையில் புரெவி புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புரெவி புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கருணாகரன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆவின் தலைவர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட 
போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தமிழக அரசால் சுற்றறிக்கையாக அனைத்துத்துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு 
உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்கனவே தமிழகத்தை தாக்கிய நிவர் புயலின்போது எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

புரெவி புயலால் நெல்லை உள்பட தென்தமிழக பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள் ளன. நெல்லை மாவட்டத்தில் 1,124 குளங்கள் உள்ளன. அவை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உபரிநீரை எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியேற்றவும், பாபநாசம் உள்ளிட்ட அணைகள், குளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

188 பாதுகாப்பு முகாம்கள்
மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 188 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 633 முன்கள பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தென்தமிழகத்தில் மழை நிவாரண முகாம்களில் சுமார் 2 லட்சம் பேரை தங்க வைக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீர்நிலைகள், மழையால் தண்ணீர் தேங்கும் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பிரச்சினைகளை தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புயலின் வேகம் அதிகரிப்பு
குமரி -பாம்பன் இடையே கரையை கடக்கும் புரெவி புயலால் அதீத மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மழை நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். புரெவி புயலால் உருவாகும் காற்றின் வேகம், மழையளவு போன்றவை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது புயலின் வேகம் 10 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது.

புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மட்டுமே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். புயலால் பாதிப்புகள் வந்த பின்பு ஓடுவதை விட முன்எச்சரிக்கையாக தற்காத்துக் கொள்வதே சிறந்தது. அதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இன்பதுரை எம்.எல்.ஏ.

புயல், மழை காலங்களில் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளம் ஒன்றை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும். புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் புகுந்து அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள கடற்கரை கிராமங்களான இடிந்தகரை, கூத்தங்குழி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், காடுதுலா, தில்லைவனம்தோப்பு மற்றும் விஜயாபதி கிராமங்கள் விஜயாபதி சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தனித்தீவாகி அப்பகுதி மக்களை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் விஜயாபதி அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும்.

ராதாபுரம் தொகுதி மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவது போன்று சாட்டிலைட் போன் வழங்க வேண்டும். கன்னங்குளத்தை ஒட்டிய பெருமாள்புரம் பகுதி ஒவ்வொரு புயல் மழை காலங்களிலும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை தடுக்க அங்கு வெள்ள தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும். இந்த 4 கோரிக்கைகளையும் தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தென்காசி
தென்காசி உதவி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், புரெவி புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று இரவு நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் சமீரன் தென்காசி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் வலுவிழந்தது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தென் மாவட்டங்களில் புரெவி புயலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு நல்ல செய்தி கிடைத்து உளளது. புரெவி புயலானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் மழைப்பொழிவு இருக் கும். காற்றின் வேகம் குறைவாக இருக்கும். எனவே மக்கள் அச்சப்பட தேவை இல்லை.

முதல்-அமைச்சர் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்டு இதுகுறித்த அறிவுரைகளை அடிக்கடி வழங்கி வருகிறார். தென்காசியில் கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் இங்கேயே முகாமிட்டு மாவட்ட கலெக்டருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நடவடிக்கை
தாழ்வான பகுதிகள், குடிசை வீடுகள் போன்ற இடங்களில் இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்கு பாதுகாப்பான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரத்தை கையாளுவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு 

வருகிறார்கள். குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். பாதுகாப்பாக இருக்கும் நிலையில் அவர் அனுமதி அளிப்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

புதிய ஆம்புலன்ஸ்கள்
முன்னதாக, தென்காசி மாவட்டம் திருவேங்கடம், ஊத்துமலை ஆகிய ஊர்களுக்கும் நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர், கங்கைகொண்டான் ஆகிய ஊர்களுக்கும் புதிய ஆம்புலன்ஸ்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

தென்காசிக்கு வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கலெக்டர் சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, முன்னாள் எம்.பி. பிரபாகரன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.சண்முகசுந்தரம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் என்.சேகர், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாதன், குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், தென்காசி நகர செயலாளர் சுடலை, மாவட்ட 
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.கே.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்