வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் - விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்தது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-12-03 12:00 GMT
விழுப்புரம்,

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், இதற்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சகாபுதீன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் நிர்வாகி செண்பகவள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் நாகராஜன், தாண்டவராயன், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விக்கிரவாண்டியில் வட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். செஞ்சியில் வட்ட தலைவர் மாதவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். அதுபோல் திண்டிவனத்தில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி தலைமையில், மாவட்ட தலைவர் ஏழுமலை முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு-புதுவை பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் கோதண்டம், மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் செய்திகள்