விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர், தரகம்பட்டியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர், தரகம்பட்டியில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-03 01:29 GMT
கரூர்,

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேற்று கரூர் வெங்கமேட்டில் கரூர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். இதில் தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

அனைத்து சங்கத்தினர்

இதேபோல் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நேற்று மாலை மாவட்ட அனைத்து சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கின்ற புதிய மின்சார திருத்த சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கரூர் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

தரகம்பட்டி

இதேபோல் தரகம்பட்டி கடைவீதியில் கடவூர் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமமூர்த்தி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலில் ஈடுபட்டவர்களை, சிந்தாமணிபட்டி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் செய்திகள்