நடிகர்களின் கட்சிகளால் தி.மு.க. வாக்குகள் பிரியும்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ
நடிகர்களின் கட்சிகளால் தி.மு.க. வாக்குகள் தான் பிரியும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனை கூட்டம்
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி சார்ந்த 98-வது வட்டத்தின் வாக்குசாவடி முகவர்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் திருநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச்செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் திருநகர் பாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. வாக்குகள் தான்....
ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி ஒரு மாதம் அல்ல ஒரு வாரம் கூட நீடிக்காது என்று பேசினார்கள். ஆனால் தற்போது 4½ ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 3-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. எம்.ஜி.ஆருக்கு பிறகு எந்த நடிகரும் நல்லவராகவும் இல்லை, வல்லவராகவும் இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர்களின் கட்சியால் அ.தி.மு.க.விற்கு வாக்கு குறையாது. தி.மு.க.வின் ஓட்டுகள் தான் பிரியும்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதி வைத்துக்கொண்டு மேடையில் பேசி வருகிறார். அவரால் எழுதி வைக்காமல் 5 நிமிடம் கூட மேடையில் பேச முடியாது. தி.மு.க. ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்வெட்டு போன்று அ.தி.மு.க.வில் எந்த குறையும் இல்லை. மக்களுக்கு செய்யாத சாதனையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், பாசறை மாவட்ட துணைச்செயலாளர் செல்வக்குமார், திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பலராமன், பகுதி துணைசெயலாளர்கள் பால்பாண்டி, செல்வக்குமார், தொழிற்சங்க பகுதி செயலாளர் மணி, அமைப்புசாரா பகுதி செயலாளர் ஜெயமுருகன், மீனவரணி பகுதி செயலாளர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப செயலாளர் அசோக், வட்ட துணைச்செயலாளர் கோபிநாத், எம்.ஜி.ஆர். மன்ற வட்ட செயலாளர் ஆத்மராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.