‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஊத்துக்கோட்டை மேம்பாலத்தை கடக்க தற்காலிக இரும்பு படிகள் அமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேம்பாலத்தை கடக்க தற்காலிக இரும்பு படிகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊத்துக்கோட்டை,
‘நிவர்’ புயல் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு கடந்த 25-ந் தேதி முழுவதுமாக நிரம்பியது. இதனை தொடர்ந்து உபரிநீர் ஆரணி ஆற்றில் விடப்பட்டதால், ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்பவர்கள் மாற்றுப்பாதையில் 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், பெருஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, நந்திமங்கலம், மேலகரமன்னூர் உட்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பகுதிகளில் ஆற்றை கடக்க வசதியாக இருபுறங்களிலும் தற்காலிக இரும்பு பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், கட்டுமானத்துக்கு தொழிலாளர்கள் பயன்படுத்தும் கம்பிகளை ஏணிகளாக பயன்படுத்தி பொதுமக்கள் ஆரணி ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து வந்தனர்.
இப்படி ஏணிகளில் ஏறும்போது சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 1-ந் தேதி வெளியாகியது. இதனை தொடர்ந்து ஏணிகள் மீது ஏறி பாலத்தை கடக்க போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மேம்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்வதை தடுக்கும் வண்ணம் தற்காலிக இரும்பு படிகள் நேற்று அமைக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் படிகள் மூலமாக பாலத்தை கடந்து போந்தவாக்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட பஸ்களில் திருவள்ளூர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு சென்றனர்.