கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
கடல் அரிப்பால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தூண்டில் வளைவு அமைத்துத்தரக்கோரி தேவனேரி பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குடியிருப்பு பகுதியில் 300 மீனவ குடும்பத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கடல் முன்னோக்கி வந்து விட்டதால் இங்குள்ள மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இங்குள்ள மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கடல் அரிப்பு ஏற்படாத வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இங்கு தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் தாங்களாகவே முன் வந்து கருங்கற்கள், காய்ந்த பனை மரத்தை கரையில் போட்டு, மேலும் கடல் நீர் குடியிருப்புகளை நோக்கி முன்னேறி வராத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி பார்த்தனர். ஆனால் தடுப்புகளை தாண்டி கடல் நீர் முன்னோக்கி வந்ததால் இங்குள்ள சிமெண்டு தள சாலை சில தினங்களுக்கு முன்பு கடல் அரிப்பால் இடிந்து விழுந்தது.
இந்த நடைபாதை வழியாகதான் வாகனங்களை நிறுத்தி மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை மொத்த வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம். அதேபோல் அந்த இடத்தில் வடக்கு, தெற்கு என இரு திசைகளிலும் மணல்பகுதி முழுவதும் மறைந்த நிலையில் கடல் நீர் சூழ்ந்து விட்டது. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பலத்த கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் படகு, மீன்பிடி வலைகள் வைக்க இடம் இல்லாமல் மீனவர்கள் தங்கள் வீடுகள் அருகில் வைத்து அதனை பாதுகாத்தனர். 1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கடற்கரை பகுதி பாதி அளவுக்கு கடல் நீரால் சூழப்பட்டதால் 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிய மற்றும் சிறிய படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்கள் பரிதவித்த நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக தேவனேரி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து மேலும் கடல் சீற்றம் ஏற்படாத வகையில் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக தங்கள் கோரிகையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.