அணைக்கட்டில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மாயம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்று அணைக்கட்டில் குளித்த வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-12-03 00:29 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள சாணார் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 22). இவர் நேற்று மதியம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். இந்த அணைக்கட்டானது ஆரணி ஆற்றின் குறுக்கே அமைய பெற்றதாகும்.

இந்த நிலையில், அணைக்கட்டின் ஒரு பகுதியில் குளித்து கொண்டிருந்த சுபாஷ், திடீரென நீரின் சுழற்சியால் உள்ளே இழுக்கப்பட்டு திடீரென மாயமானார்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, ஆரணி ஆற்று அணைக்கட்டில் அடித்து செல்லப்பட்ட சுபாஷை நேற்று மாலை வரை தேடினர். அதன் பிறகு இரவானதால் அவரை தேடும் முயற்சியை கைவிட்டனர். இன்று (வியாழன்) காலை, வாலிபர் சுபாஷை தீயணைப்புத்துறையினர் மீண்டும் தேடும் முயற்சியை மேற்கொள்ள உள்ளனர். அப்பகுதியில் கவரைப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்