மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, நெல்லை, விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
சாலைமறியல் போராட்டம்
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும், அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் 100 நாள் வேலைத்திட்டத்தில் இணைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அரசு காலிப்பணியிடங்களில் பின்னடைவு உள்பட 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் செல்வசுந்தரி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் நம்பிராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு அகஸ்திய ராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், சங்க பொறுப்பாளர் சுரேஷ்பாபு, சி.ஐ.டி.யு. இசக்கிராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சேரன்மாதேவி, அம்பை, முக்கூடல் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.