மராட்டியத்தில் சாதிகளை சார்ந்து இருக்கும் ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

மராட்டியத்தில் சாதிகளை சார்ந்து இருக்கும் ஊர்களின் பெயர்களை மாற்ற மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2020-12-02 23:15 GMT
மும்பை, 

மராட்டிய மந்திரி சபை கூட்டம் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் சாதி பெயர் களை சார்ந்து உள்ள ஊர்களின் பெயர்களை மாற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகர்-வாடா, பவுத்-வாடா, மங்-வாடா, தோர்- வஸ்தி, பிராமன்-வாடா, மாலி-கல்லி ஆகியவை பொதுவான இடங்கள். ஆனால் அந்த பெயர்கள் மராட்டியம் போன்ற ஒரு முற்போக்கான மாநிலத்திற்கு தகுதியற்றவை.

இந்த ஊர்களை மறுபெயரிடுவதற்கான முடிவு சமூக நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும் பேணுவதற்காக எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஊர்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படும்.

சமதா நகர், பீம் நகர், ஜோதிநகர், சாகு நகர், கிராந்தி நகர் என்பது போன்று புது பெயர் வைக்கப்படும்.

ஏற்கனவே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலித் மித்ரா புராஸ்கர் என்ற விருதின் பெயரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமாஜ்பூஷன் புராஸ்கர் என மாநில அரசு மாற்றி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை ஆண்டு தோறும் நாக்பூரில் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது.

அப்போது மூத்த தலைவர்கள் பலரும் கொரோனா தொற்று காலத்தில் நாக்பூருக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் கோப்புகளை நாக்பூருக்கு மாற்றுவது கடினம் என கூறினர். நாக்பூரில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால், அது கொரோனா பரவலுக்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து சட்டசபை குளிர்கால கூட்டத்தை மும்பையிலேயே நடத்த சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு எடுத்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நாக்பூரில் இருந்து மும்பைக்கு மாற்றும் சட்டசபை அலுவல் ஆய்வு குழுவின் பரிந்துரைக்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இது கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை வரும் 7-ந்தேதி முதல் நாக்பூரில் நடத்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் நிகழ்ச்சி நிரல் மற்றும் வேலை நாட்களை தீர்மானிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் கூட உள்ளது.

மேலும் செய்திகள்