போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரியாவின் தம்பிக்கு ஜாமீன் கிடைத்தது

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரியாவின் தம்பி சோவிக்கிற்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-12-02 22:11 GMT
மும்பை, 

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து இந்தி திரையுலகம் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியது. நடிகை ரியா சக்ரவர்த்தி தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தது மற்றும் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல நடிகை ரியாவின் தம்பி சோவிக் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சோவிக் பலமுறை முயன்றும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் சோவிக் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி குராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் சோவிக் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாக அவரது வக்கீல் வாதாடினார். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பதையும் அவர் நினைவுக்கூர்ந்தார். அதேநேரத்தில் அவரை ஜாமீனில் வெளியே விட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சோவிக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்காக ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்