கடலோர பகுதியில் புயல் எச்சரிக்கை ஆழ்கடலுக்கு சென்ற 2,300 மீனவர்கள் கரை திரும்பாததால் பரபரப்பு

கடலோர பகுதியில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற 2,300 மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-12-02 06:03 GMT
கொல்லங்கோடு,

குமரி மாவட்டத்தில் தூத்தூர் மண்டலத்தில் இரையுமன்துறை முதல் நீரோடி வரை 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன்பிடித்து வருகின்றன. இவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு கடலுக்கு சென்று வருவார்கள்.

தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறலாம் என்றும், எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்ப வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக துறைமுக பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதையடுத்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 3 தினங்களாக விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே சென்றிருந்த மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

2,300 மீனவர்கள்

ஆனால், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 158 படகுகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், இந்த படகுகளில் இருக்கும் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். இதனால் கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கரை திரும்பிய விசைப்படகுகள் அனைத்தும், இரையுமன்துறை கடற்கரை மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘சேட்லைட்’ போன்

இதுகுறித்து அன்னை லூர்தம்மாள் சைமன் தேசிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராபின்சன் கூறியதாவது:-

புயல் எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு முன்பே தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருப்பார்கள். தற்போது உருவாகியுள்ள புயல் இந்த பகுதியை அதிகம் தாக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு முறையான அறிவிப்பு இதுவரை சென்றடையவில்லை.அவர்களின் விசைப்படகுகளில் உள்ள சேட்டிலைட் போன்கள் தரம் குறைந்தவைகளாக உள்ளன. 20 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலே இந்த சேட்டிலைட் போன்கள் வேலை செய்யாது. எனவே, இதுபோன்ற பேரிடர் நேரங்களில் தகவல் தெரிவிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய சேட்டிலைட் போன்கள் வழங்க வேண்டும்.

ஜி.பி.எஸ். கருவி

மேலும் மீனவர்கள் இருக்கும் இடங்களை ஆராய்ந்து ராணுவ ஹெலிகாப்டர் படைகளை அனுப்பி அவர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்டு கொண்டு வர வேண்டும். மேலும், சாலையில் இயங்குகிற கனரக வாகனங்களில் பொருத்தப்படுகிற ஜி.பி.எஸ். கருவி போன்ற கருவியை ஒவ்வொரு விசைப்படகிலும் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கடலில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்