தமிழகத்தில் மணல் விலை குறைய கூடுதலாக குவாரிகளை திறக்க வேண்டும் - சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி பேட்டி
தமிழகத்தில் மணல் விலை குறைய கூடுதலாக குவாரிகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீதிபதி வேதனை
அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைப்பதில்லை. ஒரு யூனிட் மணல் தங்கத்தின் விலைக்கு சமமாக ரூ.45 ஆயிரம் வரை விற்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தன்னுடைய அதிர்ச்சியையும், வேதனையையும் தெரிவித்து உள்ளார். உண்மையில் எதார்த்த நிலை என்னவென்று சொன்னால் மணல் விலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விற்றதை விட சற்று கூடுதலாக விற்கப்படுகிறது. இதற்கு காரணம் லாரி உரிமையாளர்கள் அல்ல. அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தற்போது ஒரு யூனிட் மணல் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. தினசரி 60 ஆயிரம் யூனிட் மணல் அரசு குவாரிகள் மூலம் ஒரு யூனிட் ரூ.313-க்கு லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
கூடுதல் குவாரிகள்
ஆனால் தற்போது தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய 2 அரசு மணல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி அதிகபட்சம் 500 யூனிட் மணல் எடுத்து, ஒரு யூனிட் மணல் ரூ.1,995 என விற்பனை செய்கிறார்கள். அதிலும் அரசு ஒப்பந்த வேலைக்கு என்று ஏறத்தாழ 100 முதல் 150 யூனிட் மணல் முன்னுரிமை அடிப்படையில் எடுத்து கொள்கிறார்கள். இதுவே மணல் விலை ஏற்றத்திற்கு காரணம் ஆகும்.
பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் கொடுக்க வேண்டும், கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்று சொன்னால், அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகளை தடுத்து, உடனடியாக தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் அதாவது கூடுதலாக குவாரிகளை திறக்க வேண்டும். அரசு வேலை, பொது வேலைக்கு என்று தனி இணையதள பதிவு இல்லாமல் ஒரே இணையதளம் மூலம் அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும்.
வாடகை நிர்ணயம்
மணலை விலையை குறைத்து விற்பதற்கு ஒரே தீர்வு, அதிக எண்ணிக்கையிலான குவாரிகளை தமிழகம் முழுவதும் திறந்து தினசரி அல்லது குறைந்தபட்சம் வாரம் ஒரு லாரிக்கு ஒரு லோடு மணல் வழங்க வேண்டும். அரசே லாரிகளுக்கு உரிய கி.மீட்டர் வாடகை நிர்ணயித்தால் நாங்கள் வாடகைக்கு பெற்றுக்கொண்டு மணல் எடுத்து சென்று பயனாளிகளுக்கு கொடுக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.