காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவிரக்தி: மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனவிரக்தியடைந்த மெக்கானிக் வாலிபர் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-01 21:30 GMT
செங்குன்றம், 

சென்னை அடுத்த செங்குன்றம் அப்துல் வகாப் தெருவை சேர்ந்தவர் மசூத் அகமது (வயது 25). புழல் அண்ணா நினைவு நகரில் உள்ள கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள பெண்ணின் பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவிரக்தியுடன் காணப்பட்ட மசூத் அகமது, நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புழல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், தினந்தோறும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து, மனைவி பிரியாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு குடித்து விட்டு வந்த நிலையில், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமு உடைந்த சதீஷ்குமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி அடுத்த பூம்பொழில் நகர் தாமரை தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (48). கூலித்தொழிலாளியான இவர், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திட்டிய அவரது மனைவியை பயமுறுத்துவதாக நினைத்து, வீட்டுக்குள் சென்று மேற்கூரையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்வது போல் நடித்துள்ளார்.

அப்போது திடீரென கழுத்து இறுக்கி துடிதுடித்து இறந்தார். இதையறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்