புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: குற்றாலம், கடையநல்லூர் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம், கடையநல்லூர் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-12-01 22:00 GMT
தென்காசி,

வங்க கடலில் உருவான புயல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ், மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் நேற்று குற்றாலம், இலத்தூர், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் முன்எச்சரிக்கையாக எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்வையிட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் வந்துள்ளார். இன்று (நேற்று) பல்வேறு இடங்களை அதாவது இதற்கு முன்பு வெள்ளம் வந்தபோது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 446 குளங்களின் கரைகள் ஆய்வு செய்யப்பட்டு உடைப்பு ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் அனுஜார்ஜ் ஆய்வு மேற்கொண்டார். அதாவது மழை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் சூழ்ந்து காணப்படும் சீவலான் கால்வாய் கரையோரம் அமைந்துள்ள மதினா நகர் மற்றும் பாப்பான் கால்வாய் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள முகாம்களில் தங்கும் நபர்களுக்கு தேவையான பாய், தலையணை, தண்ணீர் பாட்டில், உணவு ஏற்பாடு ஆகியவை தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டார். அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பேட்டை பகுதி பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற பெண் மீட்பு குழுவினர்களிடம் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பெண்களை மீட்கும் முறைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் கேட்டறிந்தார்.

அவருடன் வருவாய் அலுவலர் கல்பனா, உதவி கலெக்டர் சரவண கண்ணன், தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் முருகுசெல்வி தலைமை தாங்கினார். ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, இடர்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, ஆபத்து நேரத்தில் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து எடுத்து கூறப்பட்டது.

கூட்டத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன்பட்டாணி, தனித்துணை தாசில்தார் தாமரைச் செல்வன், குடிமைப்பொருள் துணை தாசில்தார் முருகம்மாள், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்