கோபியில் ரோட்டோரம் தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயம்; கடத்தலா? போலீஸ் விசாரணை

கோபியில் ரோட்டோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமானது. குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-12-01 00:18 GMT
கோபியில் மாயமான குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் நிற்கும் காட்சி; குழந்தை தில்லி.
தூங்க சென்றனர்
கோபி பஸ் நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள பாலத்தில் ஏராளமான ஊசி, பாசி மணி விற்கும் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பகலில் ஊசி, பாசி மணி விற்றுவிட்டு இரவில் பாலத்தில் குடும்பத்துடன் படுத்து தூங்குவார்கள். அவர்களில் ஒருவர் அம்மாசை (வயது 28), இவருடைய மனைவி திலகா (26). இவர்களுக்கு தில்லி (2) உள்பட 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அம்மாசையின் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். தில்லியும் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்தான்.

குழந்தை மாயம்
இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அம்மாசையும், திலகாவும் கண் விழித்து பார்த்துள்ளனர். அப்போது தில்லியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோபி போலீசில் திலகா, குழந்தையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தில்லி கடத்தப்பட்டானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

கோபி பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்