கர்நாடகத்தில் 2 கட்டமாக நடக்கிறது வருகிற 22, 27-ந் தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் - மாநில தேர்தல் அதிகாரி அறிவிப்பு
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வருகிற 22 மற்றும் 27-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் அதிகாரி பசவராஜ் நேற்று அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 30 மாவட்டங்களில் 6,004 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த நிலையில் கிராம பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. கர்நாடக மாநில தேர்தல் அதிகாரி பசவராஜ் இதுபற்றி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மொத்தம் 6,004 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில் 162 கிராம பஞ்சாயத்துகளின் பதவி காலம் இன்னும் நிறைவு பெறவில்லை. 6 கிராம பஞ்சாயத்துகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதுபோல, சில பஞ்சாயத்துகளுடன் பல கிராமங்கள் இணைக்கப்பட்டு, அதனை இறுதி செய்யாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால், அந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது தேர்தல் நடத்த சாத்தியமில்லை.
இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள 6,004 கிராம பஞ்சாயத்துகளில், 5,762 கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,762 கிராம பஞ்சாயத்துகளில் 92 ஆயிரத்து 121 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 5,762 கிராம பஞ்சாயத்துகளுக்கு வருகிற 22 மற்றும் 27-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 7-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருகிற 11-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 12-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வருகிற 14-ந் தேதி கடைசிநாள் ஆகும். முதற்கட்டமாக 22-ந் தேதி நடைபெறும் கிராம பஞ்சாயத்துகளில் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்கலாம்.
இதுபோன்று, 2-வது கட்டமாக வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கான வேட்பு மனு தாக்கல் 11-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. 16-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 19-ந் தேதி கடைசிநாள் ஆகும். 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக நடைபெறும் கிராம பஞ்சாயத்துகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், வருகிற 24-ந் தேதி அங்கு மறு தேர்தல் நடத்தப்படும். அதுபோல 2-ம் கட்டமாக நடைபெறும் கிராம பஞ்சாயத்துகளில் தேவைப்பட்டால் வருகிற 29-ந் தேதி மறு தேர்தல் நடத்தப்படும். மாநிலத்தில் 2 கட்டமாக நடைபெறும் 5,762 கிராம பஞ்சாயத்துகளில் பதிவான வாக்குகள் வருகிற 30-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கிராம பஞ்சாயத்துகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. பீதர் மாவட்டத்தில் மட்டும் வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஆண்கள், பெண்கள் மற்றும் 3-ம் பாலினத்தினர் உள்பட ஒட்டு மொத்தமாக 2 கோடியே 97 லட்சத்து 15 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர். கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பஞ்சாயத்து தேர்தலையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக 5,847 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 6 ஆயிரத்து 85 உதவி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 45 ஆயிரத்து 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் கிராம பஞ்சாயத்து தேர்தலை மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக மத்திய உள்துறையின் வழிகாட்டு நெறி முறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும். வாக்களிக்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், வாக்குச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று(அதாவது நேற்று) முதல் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதிகாரி பசவராஜ் கூறினார்.