திருப்பூர் கே.செட்டிபாளையம் அருகே மைய தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் தாராபுரம் சாலையில் வைக்கப்பட்ட மைய தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-30 22:03 GMT
கே.செட்டிபாளையம்-தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் தாராபுரம் சாலையில் வைக்கப்பட்ட மைய தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு கே.செட்டிபாளையம், அய்யம்பாளையம் பிரிவில் தாராபுரம் மெயின்ரோட்டை கடக்கும் இடத்தில் அதிக விபத்துகள் ஏற்படுவதாலும், வாகனங்களை வளைவில் திருப்பும்போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாலும் சாலையின் நடுவில் தடுப்புகளை (டிவைடர்)வைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 9.15 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ், இன்ஸ்பெக்டர் கணேஷ், தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊரக சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றினர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தடுப்பை அகற்ற கோரிக்கை
மேலும் கே.செட்டிபாளையம் பழைய பஸ் நிறுத்தம் அருகே தாராபுரம் சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வ.உ.சி. நகர், பாரதி நகர், எல்.எஸ்.சி.நகர், பழனி ஆண்டவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 40 நாட்களுக்கு முன்பு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பெண்களும் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பின்னர் அவர்களை சமாதானம் செய்த போலீசார் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் பேசி நாளைக்குள் (புதன்கிழமை) சிமெண்டு தடுப்புகளை அகற்றி விடுவதாக தெரிவித்தனர். அதனால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் நாளை தடுப்புகளை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்