கூடங்குளம் அருகே இருதரப்பினர் மோதல்: 6 வீடுகள் சூறை; 8 மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு 4 பேர் கைது; 19 பேருக்கு வலைவீச்சு

கூடங்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 வீடுகள் சூறையாடப்பட்டன. 8 மோட்டார் சைக்கிள்கள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து, தலைமறைவான 19 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-28 22:45 GMT
கூடங்குளம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிக்குளம் பஞ்சாயத்து புதுமனை வடக்கு தெருவைச் சேர்ந்த 18 வயதான என்ஜினீயரிங் மாணவர் நேற்று முன்தினம் இரவில் பக்கத்து தெருவான இந்திரா காலனி வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிவன்மணி என்பவர் என்ஜினீயரிங் மாணவரை வழிமறித்து கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பிய என்ஜினீயரிங் மாணவர், இதுகுறித்து தன்னுடைய நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து என்ஜினீயரிங் மாணவர் உள்பட 23 பேர் இரவில் இந்திரா காலனிக்கு சென்றனர். அங்கிருந்த சிவன்மணியின் அண்ணன் கதிரவன், மாமா முருகன், அத்தை சுபா ராணி, உறவினரான முருகேசன் ஆகிய 4 பேரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

மேலும் அங்குள்ள 6 வீடுகளின் மீது கல்வீசி தாக்கி சூறையாடினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர். அந்த தெருவில் இருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் உடைத்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது.

இதில் காயம் அடைந்த கதிரவன் உள்ளிட்ட 4 பேரும் செட்டிக்குளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்தும், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சமேய் சிங் மீனா மற்றும் கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ஜினீயரிங் மாணவர் மற்றும் அழகேசன் மகன் சஞ்சய் (19), சுயம்பு மகன் முத்து (36), பால்துரை (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 19 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, இந்திரா காலனி அரச மரத்தடியில் நேற்று அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று என்ஜினீயரிங் மாணவரை அவதூறாக பேசி மிரட்டி, பிரச்சினைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கூடங்குளம் போலீஸ் நிலையத்தை புதுமனை வடக்கு தெரு பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

கூடங்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்