கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ‘வியாபாரிகளுக்கு விரைவில் கடை அமைக்க இடம் வழங்கப்படும்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘கோவில்பட்டியில் வியாபாரிகளுக்கு விரைவில் கடை அமைக்க இடம் வழங்கப்படும்‘ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் தமிழக திரைத்துறைக்கு முதல்-அமைச்சர் பல்வேறு சலுகைகள் மட்டுமல்ல, நிவாரணங்களை அறிவித்துள்ளார். 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது ஓ.டி.டி.யில் புதிய திரைப்படங்கள் வெளியாவதால் தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கோவில்பட்டி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அவசிய தேவை காரணமாக ஓடை கடைகளை அகற்ற அரசு முடிவெடுத்தபோது, கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். அங்கு இடைக்கால தடை வந்தாலும் கூட, நீர்வழி போக்கில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது. அந்த கடைகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்றத்துக்கு அரசு செல்லவில்லை. கடைக்காரர்கள் தான் முதலில் சென்றனர். இதையடுத்து 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வியாபாரிகளுக்கு விரைவில் உரிய இடத்தை கண்டறிந்து கடைகள் அமைக்க இடம் வழங்கப்படும். நீண்ட காலமாக இருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார்கள் மணிகண்டன், மல்லிகா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் சுதர்சன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜூ உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக தமிழக அரசின் 2020-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்.சீனிவாசனுக்கு வழங்கி உள்ளது. கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் மற்றும் இந்திய கலாசார நட்புறவு கழக செயலாளரான தலைமை ஆசிரியர் நம்.சீனிவாசனுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். தமிழறிஞர் மு.படிக்கராமு, அகில இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் என்.டி.சீனிவாசன், இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலாளர் டாக்டர் அறம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் தமிழ் செம்மல் கருத்தப்பாண்டி பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலைமுத்துச்சாமி, இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.