ஓட்டப்பிடாரம் அருகே கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஓட்டப்பிடாரம் அருகே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ்காரர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Update: 2020-11-28 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் கடந்த 20-10-2017 அன்று முன்விரோதம் காரணமாக நடுவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் (68), அவரது மகன் மாரிமுத்து (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு லட்சுமணன் மருமகனும், தருவைக்குளம் அருகே உள்ள அனந்தமடன்பச்சேரியை சேர்ந்தவரும், முத்தையாபுரம் போலீஸ் நிலைய முதல் நிலை காவலருமான ஆனந்தகுமார் (31) என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆனந்தகுமார் மருத்துவ விடுப்பில் சென்று இருப்பதும், முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாரை கைது செய்ய தனிப்படை அமைத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி தூத்துக்குடி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிகுமார் மேற்பார்வையில் புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகரில் ஆனந்தகுமார் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்