பூதப்பாண்டி அருகே, நண்பரை குத்திக் கொன்றது ஏன்? கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
பூதப்பாண்டி அருகே நண்பரை குத்திக் கொன்றது ஏன்? என்பது தொடர்பாக கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே செக்கடி பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 31), டெம்போ டிரைவர். இவரும், பண்ணியோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (42) மற்றும் தேவராஜ் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடிக்க சென்றனர். அங்கு மது குடித்து கொண்டிருந்த போது ஜெபசிங், சேகர் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த தேவராஜ் அவர்களை சமாதானப்படுத்தி ஜெபசிங்கை மதுக்கடையில் இருந்து வெளியே அழைத்து சென்றார்.
பின்னர், ஜெபசிங்கும், தேவராஜும் அருமநல்லூர் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் அங்கு வந்த சேகர், ஜெபசிங் நிற்பதை கண்டு அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த சேகர், திடீரென ஆட்டோவில் வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து ஜெபசிங்கின் தலையில் குத்தி, காலால் மிதித்து தள்ளி விட்டு தப்பிச் சென்றார்.இதில், ஜெபசிங் ரத்த காயங்களுடன் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜெபசிங்கை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெபசிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேகரை கைது செய்தார். அத்துடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இறந்த ஜெபசிங்க்கு வினிஷா (23) என்ற மனைவியும், ஜெஸ்வின் ஜினோ (1½) என்ற மகனும் உள்ளனர். கைதான சேகர், நண்பரை குத்திக் கொன்றது ஏன்? என்பது குறித்து மேற்கண்ட தகவலை வாக்குமூலமாக கொடுத்ததாக போலீசார் கூறினர்.