மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க ரூ.30 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி - கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்க ரூ.30 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இருப்பு வைப்பதற்காக ரூ.30 கோடியே 8 லட்சம் மதிப்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் பாதுகாப்பு பெட்டக அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சரிபார்க்கும் அறை, காவல்துறை பாதுகாப்பு அறை மற்றும் கட்டிடத்தை சுற்றி பாதுகாப்பு சுற்று சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும். சுற்றுச்சுவர் உயரமாக அமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நகுலன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.