சேந்தன்குடியில் மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அகற்றப்பட்டது

சேந்தன்குடியில் மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்திருந்ததால் இறந்தவர் உடலை கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உடல் தூக்கிச் செல்லப்பட்டது.

Update: 2020-11-27 22:15 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் யாராவது இறந்தால் அவரது உடலை மயானத்திற்கு தூக்கி செல்வது சிரமமாக இருந்தது.

இதனால் இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் மயானத்திற்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் செல்லாயி என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பாதை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யப்போவதில்லை என்று மூதாட்டியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து நேற்று வந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு மூதாட்டி உடல் அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்று உடல் தகனம் செய்தனர்.

மேலும் செய்திகள்