என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு - தேர்தல் குறித்து ஆலோசனை

புதுவையில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அப்போது சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Update: 2020-11-27 23:24 GMT
புதுச்சேரி, 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஏற்கனவே உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார். இது அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காது. இது சில தொகுதிகளில் வெற்றியை பாதிக்கும் என்று கருதுகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சந்திப்பின் போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால், பொருளாளர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு மற்றும் பலர் உடனிருந்தனர்.

இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் காங்கிரஸ் அரசு கடந்த 4½ ஆண்டு காலமாக இருண்ட ஆட்சியை நடத்தி வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. மக்கள் பயம் கலந்த பீதியில் வாழ்ந்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது ரங்கசாமி கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் தொடரவில்லை. மக்களுக்கு இலவச அரிசி கூட வழங்கவில்லை. கடந்த 56 மாத காலத்தில் 18 மாதம் மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள மாதத்திற்கு பணம் வழங்கவில்லை.

என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 1 லட்சத்து 45 ஆயிரம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது ஒருவருக்கு கூட கூடுதலாக வழங்கப்படவில்லை. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட உதவித்தொகை தான் இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. தொகையும் அதனை விட ரூ.100 கூட உயர்த்தப்படவில்லை. திட்டங்களை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேட்டால் எதிர்க்கட்சி சரியாக செயல்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். தற்போது மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த மாற்றம் என்பது எங்கள் கூட்டணி மூலம் நிச்சயமாக நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்