‘நிவர்’ புயல் பாதிப்பு ஏற்படுத்தாததால் வேதாரண்யத்தில், ரூ.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் டன் உப்பு தப்பியது
‘நிவர்’ புயல் பாதிப்பு ஏற்படுத்தாததால் வேதாரண்யத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் டன் உப்பு தப்பியது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கிறது, இதில் 3 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்களும், 6 ஆயிரம் ஏக்கரில் தனியார் நிறுவனங்களும் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அடிக்கடி பெய்த மழையால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. இருந்த போதிலும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.
ரூ.10 கோடி உப்பு தப்பியது
சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த உப்பு விற்பனை செய்தது போக 1 லட்சம் டன் இருப்பு வைத்து இருந்தனர். இந்த நிலையில் ‘நிவர்’ புயல் எச்சரிக்கையால் தங்கள் இருப்பு வைத்திருந்த உப்பு, கஜா புயலில் சேதமடைந்தது போல ‘நிவர்’ புயலிலும் சேதமடைந்து விடும் என அச்சம் அடைந்தனர். இதனால் தாங்கள் இருப்பு வைத்திருந்த உப்பை பனைமட்டை, பிளாஸ்டிக், தார்ப்பாய் கட்டி பாதுகாப்பாக வைத்தனர்.
இந்த நிலையில் ‘நிவர்’ புயல் வேதாரண்யத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் புதுச்சேரியில் கரையை கடந்ததாலும், வேதாரண்யம் பகுதியில் கடந்த இரு நாட்களில் பெய்த மழையாலும் இருப்பு வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் டன் உப்புக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
உப்பு உற்பத்தி இடங்களான தூத்துக்குடியிலும், மரக்காணத்திலும் கன மழை பெய்த காரணத்தினால் வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உப்புவிற்கு நல்ல விலை கிடைக்குமென உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.