பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில், மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல்-ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-27 09:51 GMT
கரூர், 

கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும். வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ரெயில்வே, பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மாற்றுவதை கைவிட வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பிராவிடண்ட் பண்டுடன் இணைந்த ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்த வேண்டும். வருமானவரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வீதம் ஆறு மாதங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

163 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலைமறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். இதில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு.,ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யூ.டி.யு.சி., எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 78 பெண்கள் உள்பட 163 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை

குளித்தலையில் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. குளித்தலை பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க குளித்தலை ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன இதையடுத்து அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 93 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் சார்பில் குளித்தலை எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் குளித்தலை கிளை முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி ஏ.வி.எம். கார்னரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பஸ் மறியல் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கே.வி.கணேசன் தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 55 ஆண்கள் 26 பெண்கள் என மொத்தம் 81 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் காகித ஆலைதொழிலாளர் முன்னேற்ற சங்கம், டி.என்.பி.எல் தொழிலாளர் சங்கம், டி.என்.பி.எல். ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மற்றும்சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு சங்கத்தினர் சார்பில் காதித ஆலை நுழைவு வாயில் முன்பு நேற்று டி.என்.பி.எல். ஒப்பந்த தொழிற்சங்க தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வங்கிகள் செயல்பட்டன

மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், கரூரில் வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. கரூர் எஸ்.ஐ.சி.யில் ஊழியர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்