தொழிலாளர் விரோத போக்கு-விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - 893 பேர் கைது
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் மற்றும் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட 893 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தொழிற்சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டன. துறைமுகத்தில் இருந்து லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்லும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் துறைமுகத்தில் பலகோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
அதே போன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன. சில வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் தபால் அலுவலக ஊழியர்கள், பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான தபால் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.
மேலும் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே பாளையங்கோட்டை ரோட்டில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்டதலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சுசீ.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் பாலசிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் சிவராமன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், ஜனநாயக மாதர சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 93 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அங்கிருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, திருச்செந்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் மணவாளன், கன்வீனர் சிவதாணுதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. கன்வீனர் கணபதி, ஐ.என்.டி.யு.சி. இப்ராகிம், எல்.எல்.எப். தமிழ்செல்வி, எல்.பி.எப். குழந்தைவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், விடுதலை தொழில் சங்க மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெபஸ்டின் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 102 பேரை திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கோவில்பட்டியில் பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 32 பெண்கள் உட்பட 98 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், பத்மாவதி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேது, கயத்தாறு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், தவமணி மற்றும் கிளைக் கழகச் செயலாளர் தம்பிதுரை, சுடலை, வெயிலாட்சி பாலையாத்தேவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 11 பெண்களும் 37 ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் நல சட்டத்தை திருத்த கூடாது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக மாற்றி அமைத்து நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டுகட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் அசோக்குமார், விவசாய தொழிலாளர் நல சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
சாலை மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 59 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், பட்டாணி ஆகியோர் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ரவிதாகூர், ஸ்ரீவைகுண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விவசாயசங்கம் கருங்குளம் ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய விவசாய சங்க செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ. டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் உட்பட 42 பேர் கலந்து கொண்டனர். இவர் களை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளத்தில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர்கள் முனியசாமி, ராமமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் புவிராஜ், கன்வீனர் ஜோதி ஆகியோர் முன்னிலை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், தாலுகா செயலாளர் குணசீலன், தொ.மு.ச. செயலாளர் சுப்பையா, தலைவர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சண்முகம் பெருமாள் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பெண்கள் உட்பட 162 பேரை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தங்க வைத்தனர்.
கழுகுமலையில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி முன்னாள் எம்்.எல்.ஏ. ராஜேந்திரன், கயத்தாறு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சாலமோன், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு உதவிச் செயலாளர் எட்டப்பன், ஏ.ஐ.டி.யு.சி. பொருளாளர் ராமலிங்கம், மாதர் சங்கம் அந்தோணியம்மாள், விவசாய சங்கம் சீனிவாசன், 91 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் நாலாட்டின்புத்தூர் இன்ஸ்பெக்டர் சுபா தேவி ஆகியோர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
எட்டயுரம் பஸ்நிலையம் முன்பு விவசாய சங்க தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க செயலாளர் செல்வகுமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் மற்றும் 63 பெண்கள் உள்பட 118 பேர் கலந்து கொண்டனர். இவர் களை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடந்தது. அங்கு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் கணபதி சுரேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், உள்ளிட்ட 21 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சாலை மறியலில் ஈடுபட்டதாக நாசரேத்தில் 53 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 360 பெண்கள் உள்பட 893 பேர் கைது செய்யப்பட்டனர்.