வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் - ரங்கசாமி அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-11-27 05:15 GMT
புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. என்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு பூஜை செய்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., கோபிகா எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் தேனீ.ஜெயக் குமார், ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன், மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் டாக்டர் நாராயணசாமி, கட்சி பிரமுகர் ஜோ.பிரகாஷ்குமார், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் ரங்கசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கியுள் ளோம். ஏற்கனவே நாங்கள் கூட்டணியில் (அ.தி.மு.க., பா.ஜ.க.) தான் இருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும்’ என்றார்.

மேலும் செய்திகள்