விலங்குகளின் புற்றுநோய்க்கு மூலிகை எண்ணெய் வழங்குவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.61½ லட்சம் மோசடி - மர்மநபர்கள் மீது போலீசில் புகார்

விலங்குகளின் புற்றுநோயை குணப்படுத்த மூலிகை எண்ணெய் வழங்குவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.61½ லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-11-26 21:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு தொட்டனேகுந்தியை சேர்ந்தவர் ராம்ரெட்டி(பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). தொழில் அதிபரான இவர் விலங்குகளுக்கு தேவையான மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராம்ரெட்டியை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள் நாங்கள் விலங்குகளுக்கு மூலிகை எண்ணெயை வழங்கும் நிறுவனம் நடத்தி வருகிறோம். நீங்கள் எங்களுடன் இணைந்து வியாபாரம் செய்தால் குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு தருகிறோம்.

மேலும் உங்கள் நிறுவனத்திற்கு விலங்குகளின் புற்றுநோயை குணப்படுத்த உதவும் மூலிகை எண்ணெயையும் வழங்குகிறோம் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய ராம்ரெட்டியும், விலங்குகளின் புற்றுநோயை குணப்படுத்த மூலிகை எண்ணெயை வாங்க ஒப்புக்கொண்டார். பின்னர் மர்மநபர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.61½ லட்சத்தை ராம்ரெட்டி அனுப்பி உள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆனபோதிலும் மூலிகை எண்ணெய் ராம்ரெட்டியின் நிறுவனத்திற்கு வரவில்லை. இதனால் அவர் தன்னிடம் பேசிய மர்மநபர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த மர்மநபர்கள் தங்களது செல்போன் எண்களையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். அப்போது தான் மூலிகை எண்ணெய் வழங்குவதாக கூறி ரூ.61½ லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்து விட்டது ராம்ரெட்டிக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் மோசடி குறித்து கிழக்கு சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் போலீசில் மர்மநபர்கள் மீது புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதுபோல் பெங்களூரு செயின்ட் தாமஸ் டவுனை சேர்ந்தவர் சங்கமா(வயது 22). இவர் தனது வீட்டிற்கு புதிதாக வாங்கி உள்ள டி.வி.க்கு, டிஸ் பொருத்தி இருந்தார். ஆனாலும் டி.வி.யில் படங்கள் வரவில்லை. இதுகுறித்து அவர் டிஸ் நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ள இணையதளத்தில் நம்பரை தேடினார். அப்போது இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு செல்போன் எண்ணுக்கு சங்கமா தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட சில விவரங்களை சங்கமாவிடம் இருந்து பெற்றார். பின்னர் அதை பயன்படுத்தி சங்கமாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.76 ஆயிரத்தை மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சங்கமா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

மேலும் செய்திகள்