புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
நிவர் புயலால் மழை பாதிப்பிற்கு உள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளிலும், ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் என, 11 சட்டமன்றத் தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, இரு தினங்களாக மக்களைச் சந்தித்துள்ளேன்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கும் போது, கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க. அரசு கற்றுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.
மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்னும் இந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதே நிலையில்தான் நீடிக்கிறது. குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள் மட்டுமின்றி தாழ்வான பகுதிகள் முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை என்று மலையளவு பொய்யை மனம் கூசாமல் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. அமைச்சர்களும் கூறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
கணக்கு காட்டுவதற்காகத் தூர் வாராமல்-மழைநீர் கால்வாய்களை ஒழுங்காக தூர் வாரியிருந்தால் கூட சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்திருக்க முடியும்.
நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக் கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்றும், வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதுதவிர காவிரி டெல்டாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயம் இன்னும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. நிவர் புயல் காரணமாக இரு தினங்களில் பதிவு செய்யுங்கள் என்று அரசுத் தரப்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட கெடுவை மறுபரிசீலனை செய்து நவம்பர் 30-ந்தேதி வரை பயிர்க் காப் பீடு கட்டணம் செலுத்தலாம் என்று நீட்டிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் கஜா புயல், 2015 பெரு வெள்ளம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டது போல், இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் கைவிடும் நோக்கில், அ.தி.மு.க. அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். திடீர் நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பொது மக்களுக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும் நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வீராங்கல் ஓடை பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை மு.கஸ்டாலின் வழங்கினார்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.