நிவர் புயலையொட்டி பாரூர் பெரியஏரியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் நிவர் புயலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரூர் பெரிய ஏரிக்கு நிவர் புயலையொட்டி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் நீர் வெளியேற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அதை தடுக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 500 மணல் மூட்டைகள், 50 சவுக்கு மரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதை வைத்து சேதங்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் நகுலன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம், போச்சம்பள்ளி தாசில்தார் ஆஞ்சநேயா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பிரவீனா, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.