நிவர் புயல் காரணமாக பாம்பனில் அலைகள் ஓய்ந்து குளம்போல் மாறிய கடல்

நிவர் புயல் காரணமாக பாம்பனில் அலைகள் ஓய்ந்து, கடலானது நேற்று குளம் போல் மாறி காட்சி அளித்தது.

Update: 2020-11-25 22:30 GMT
ராமேசுவரம்,

வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வழக்கத்தைவிட கடல் அதிக சீற்றமாக காணப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று கடலின் இயல்புநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, அலைகள் இல்லாமல் கடல் நீர் எந்த சலனமும் இல்லாமல் குளம்போல் மாறி காட்சி அளித்தது. புயல் காரணமாக நேற்றும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வெயில் இல்லை. பகல் நேரத்திலும் பனிமூட்டம் சூழ்ந்ததுபோல் வெளிச்சமின்றி இருந்தது. மேகம் திரண்டு இருந்தாலும் மழை பெய்யவில்லை.

நேற்று 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப் படகுகளும் கரையோரம் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். புயலால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்