‘முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்’ ஓடும் பஸ்சில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் - அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு செய்தார்

‘முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்‘ என்று ஓடும் பஸ்சில் பயணிகளிடம் கலெக்டர் விஷ்ணு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர், அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-11-25 21:54 GMT
நெல்லை, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.

முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி, கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். ஓடும் பஸ்களிலும் பயணிகளுக்கு முக கவசம் வழங்கி, சமூக இடைவெளியுடன் பயணம் செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வரும்போது தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

மேலும் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதன் மூலம் வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் முககவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். வியாபார உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரிடம் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு பொருட்களை வழங்கக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் ரூ.15 கோடியே 6 லட்சம் செலவில் கட்டப்படும் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெளிநோயாளிகள் பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, மருந்தக குடோன் உள்ளிட்ட பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து துறை தலைவர்களுடனும் கலெக்டர் விஷ்ணு ஆலோசனை மேற்கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், மாநகர் நல அலுவலர் சுகன்யா, பாளையங்கோட்டை தாசில்தார் செல்வம் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்