‘அம்மா’ இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் - தென்காசி கலெக்டர் சமீரன் தகவல்
தென்காசி மாவட்டத்தில் ‘அம்மா‘ இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உழைக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.
தென்காசி,
2020-2021-ம் ஆண்டு 1 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு ‘அம்மா‘ இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பணியிடங்களுக்கு மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாகன விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இருசக்கர வாகனங்களை பெறுவதற்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உழைக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், முதிர் கன்னிகள், மாற்று பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை உண்டு. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதில் விண்ணப்பிக்க வயது சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், இருப்பிட சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது), வருமான சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் அதன் தலைவர் அல்லது சுயசான்று, வேலை பார்ப்பதற்கான பணிச்சான்று, தொடர்புடைய நிறுவன தலைவரால் வழங்கப்பட்ட ஊதிய சான்று, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோர் ஆக இருந்தால் சங்கத்தில் இருந்து சான்று, ஆதார் கார்டு முன்னுரிமை பெற தகுதி உள்ளவர்கள் அதற்கான சான்றுகள், சாதிச்சான்று (எஸ்.சி.மற்றும் எஸ்.டி. மட்டும்) இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அலுவலக நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் (கிராம ஊராட்சி), பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 21 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனமுற்றோர் விகிதத்தில் 4 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.